கருவேலி, திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு

ஸ்தல புராணம்

திருக்கருவிலிக் கொட்டிட்டையின் ஸ்தல புராணம்

கருவேலி – ஸ்தல புராணம்

சுவாமிக்கும் அம்பாளுக்கும் இடையே நடந்த சம்பாஷணை 

Image courtesy : India.com

“தேவி, நான் மீண்டும் சொல்கிறேன். அங்கு போகாதே!”.

“ஸ்வாமி! மன்னியுங்கள். என் பிறந்த வீட்டிற்குத்தானே போகிறேன். அதுவும் தங்கள் பொருட்டே. தயவு செய்து என்னைத் தடுக்காதீர்கள்!”

“எனக்கு அழைப்பில்லை; செய்யும் யோகத்திலும் அவிர்பாகம் இல்லை. இது எனக்கு அவமானமில்லையா? ஆகையால் நீ போனால் உனக்கு அவமானம். எனக்குச்  சம்மதமில்லை. வேண்டாம். நான் சொல்வதை கேள்!”

“அதையும்தான் பார்த்து விடுக்கிறேனே. தங்களுக்கு அவிர்பாகம் அளிக்காமல் நடைபெறும் யாகத்தைக் கட்டாயம் தடுப்பேன். என் பதி  அவமானப் படுத்தப்பட்டால்  நான் சும்மா இருப்பேனா? என் விஜயம் அவர்களுக்கு ஒரு பாடமாகவே அமையும். சரி, நான் வருகிறேன்.”

இப்படி மீண்டும் மீண்டும் இறைவன் பன்முறை கூறியும் தாக்ஷயிணியோ சற்றும் மசிவதாக இல்லை. தன் தந்தை தக்ஷன், மிகக் கோலாகலமாக நடத்தும் அப்பெரும் வேள்வியைக் காணப் புறப்பட்டுவிட்டாள். யாகம் நடந்து கொண்டிருந்தது. இடையில் தாக்ஷயிணி வந்ததைப் பலர் கவனிக்கவில்லை. அவளைக் கண்டா மாத்திரத்திலேயே கடுங்கோபம் கொண்ட தக்ஷன், அவளையும் ஈச்வரனையும் எல்லாரது முன்னிலையிலும் பலவாறு இகழ்ந்து பேசினான்.

அவனது கோபத்திற்குக் காரணம் இதுதான். ஒருமுறை தன மகளைக் காண தக்ஷன், திருக்கயிலையை அடைந்தபோது வாயிலிருந்த சிவகணங்கள் அவனைத் தடுத்ததோடு மட்டுமல்லாமல் அவனைப் பலவாறு கேலி செய்தன. இதனால்  அவமானம் அடைந்து தாக்ஷயிணியை  பார்க்காமலேயே தன இருப்பிடத்தை அடைந்தான். அதற்குப் பழி வாங்க, விஷ்ணுவை யாகத் தலைவராக்கி, சிவனை அடியோடு புறக்கணித்து, அடிமட்டத் தேவர்களையும் அழைத்து வேள்வி புரியலானான். யாகத்திற்கு விஜயம் செய்த ததீசி முனிவர், சிவனுக்கு அழைப்பு விடுத்து அவிர்பாகம் அளிக்கும்படி பலவாறு எடுத்துக் கூறியும், தக்ஷன் மறுத்துவிட்டு, தன்னிஷ்டப்படியே யாகத்தை நடத்திக் கொண்டு போனான்.

அன்னை ஆத்திரம் கொண்டாள். பலர் முன்னிலையில் தன் நாயகன் அவமானப்படுத்தப் படுவதைக் கண்டு அவள் மனம் பொறுக்கவில்லை. சீற்றமடைந்து அவள், “இந்தக் கணம் முதல் நீ எனக்குத் தந்தையுமில்லை; உனக்கு நான் மகளும் இல்ல. உன் பெயரோடு சம்பந்தப்பட்ட தாக்ஷயினி என்ற இவ்வுடலையும் அழித்துக் கொள்கிறேன். உனக்கு மகளாகப் பிறந்த பாவம், இந்த ஹோம அக்கினியில் என் தேகத்தை எரித்தால்தான் அகலும். இது யாகசாலை அன்று; பிணம் எரியும் சுடுகாடு!” என்று உக்கிரமாகக் கூறிக் கொண்டே கொழுந்து விட்டெரியும் அக்கினி குண்டத்தில் பாய்ந்தாள்.

அன்னையுடன் பாதுகாப்பிற்காக வந்த சிவகணங்கள், வெறி கொண்டு யாகசாலையைத் துவம்சம் செய்தன. இதற்கிடையில் ஒரு பூதம் தக்ஷன் தலையைக் கடித்து விழுங்கி விட்டது. பத்தினியான தாக்ஷயிணி அக்கினியில் வீழ்ந்து மாய்ந்ததால் மகாஸதி என்ற நாமம் பெற்றாள்.

தாக்ஷயிணியின் பிரிவைத் தாங்காத பரமன், கயிலையங்கிரியில் மிகச் சோகமாக இருந்தபோது, அவள் இறந்ததைக் கேட்டு ஆவேசமாக அந்த யாக தளத்தை அடைந்தார். குண்டத்திலிருந்த சதியின் உடலை எடுத்துத் தோளில் சுமந்து கொண்டு, பித்துப் பிடித்தவர் போல ஆடாத தொடங்கி விட்டார். அரன் ஆட அவனி ஆட்டம் கண்டது. அண்ட சராசரங்கள் ஆடாத தொடங்கின. ஈரேழு லோகங்களும் அதிர்ந்தன, ஆடின. எதிர்பாராத இவ்வாட்டங்களால் எல்லாமே தடுமாறின. தேவர்கள் நடுக்கத்தோடு கலங்கினார். செய்வதறியாது, இறுதியில் நாராயணனை அணுகி, தங்கள் இன்னல்களை எடுத்துரைத்தனர்.

அவர்களது வேண்டுகோளை கேட்ட விஷ்ணு பகவான், தனது சக்கரமான சுதர்சனத்தை ஏவினார். சிவன் அவளைக் கொண்டு போகும் போது சக்கரம் அவரைத் தொடர்ந்து கொண்டே சென்று, ஸதியின் உடலைச் சிறிது சிறிதாகத் துண்டித்துக் கொண்டு சென்றது. சுதர்சனத்தால் துண்டிக்கப்பட்ட ஸதியின் அங்கங்கள் நம் பாரத தேசத்தில் 51 இடங்களில் வீழ்ந்து மகாசக்தி பீடங்கள் என்று பிரபலமாயின. ஸதி மறைந்து விட்டதால் சிவனின் கோரா தாண்டவம் நின்று உன்மத்தம் பிடித்தவனைப் போல் தனியாக இருந்து வந்தார். தாக்ஷயினி உடலை விட்ட ஸதியோ பர்வதராஜனின் புத்திரியாகப் பிறந்து பார்வதி எனப் பெயர் பூண்டாள்.

ஈசனின் தனிமைக்கு கோலத்தை அறிந்த பார்வதி, ஸர்வாலங்கார பூஷிதையாக, சர்வாங்கசந்தரியாக அவர் முன் நின்றாள். அவ்வழகில் மனத்தைப் பறி கொடுத்த பகவான் சுயநிலை அடைந்து அவள் கைத்தலம் பற்றி மணந்துகொண்டார் எனப் புராணங்கள் கூறுகின்றன.

அத்தகைய அழகிய சுந்தரியை இன்று நீங்கள் காண ஆவலாக இருக்கிறீர்களா? வாருங்கள். திருக்கருவேலி எனும் பெயர் பெற்ற கருவேலி தளத்திற்கு. அங்கே குடிகொண்டுள்ள சர்வாங்க நாயகி அல்லது சர்வாங்க சுந்தரி என்ற நாமங்கள் பூண்டுள்ள அம்பிகையை காண்போர் மனம் கவரும் வண்ணம், பார்ப்போர் மனம் பரவசம் அடையும் வண்ணம் சுடர்விடும் விளக்கெனப் பல ஆண்டுகளாக தரிசனம் அளித்து அண்டியவரை ஆதரித்து வருகிறாள்.